படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

நிலாவுக்குப் போய் வரலாம்… கட்டணம் ஜஸ்ட் ரூ 8250 கோடிதான்!!

சான்பிரான்சிஸ்கோ: நிலவுக்கு மனிதர்களை ஜாலி சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை விரைவில் தொடங்கவிருக்கிறது ஒரு அமெரிக்க நிறுவனம். கட்டணம்? ஜஸ்ட் ரூ 8250 கோடிதான்!

1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன் முதலில் நிலாவில் காலடி வைத்தார் அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்டிராங்க்.

அங்கே மனிதன் குடியேற வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தபிறகும், நிலாவை சுற்றிப் பார்க்கும் ஆர்வம் குறையவில்லை. எனவே நிலாவுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை செயல்படுத்த முனைந்து வந்தனர்.

இப்போது அதை நிறைவேற்றும் கட்டத்துக்கு வந்திருக்கிறார்கள்.

கோல்டன் ஸ்பைக் என்ற நிறுவனம்தான் நிலாவுக்கு சுற்றுலா என்ற திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் கெர்ரி கிரிப்பின், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் பணியாற்றியவர்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த 7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.38 ஆயிரத்து 500 கோடி) முதலீடு செய்ய வேண்டிவரும். நிலாவுக்கு உல்லாசப்பயணம் மேற்கொள்வதற்கு இரண்டு நபர்களுக்கு கட்டணமாக ஒன்றரை பில்லியன் டாலர் (சுமார் ரூ.8 ஆயிரத்து 250 கோடி) வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணத்தை செலுத்தி விட்டால் இரண்டு நபர்கள் நிலாவுக்கு உல்லாசப் பயணம் சென்று இரண்டு நாட்கள் தங்கி வரலாம். எத்தனை பேர் இந்தப் பயணத்துக்கு முன்வருகிறார்களோ அதன் அடிப்படையில் கட்டணத்தில் சற்று கூடவோ, குறையவோ செய்யலாம்.

இந்தப் பயணத்தின்போது, விண்ணில் உருவாக்கப்பட்டுள்ள மிதக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக நாசா உருவாக்கி வரும் ராக்கெட்டுகள், விண்கலங்கள் பயன்படுத்தப்படும்.

“நிலாவுக்கு வணிக நோக்கில், அதுவும் நியாயமான கட்டணத்தில் நம்பத்தகுந்த விதத்தில் சுற்றுலாப்பயணம் ஏற்பாடு செய்வதுதான் எங்கள் நோக்கம்,” என்றார் கிரிப்பின்.

நிலாவுக்கு முதல் உல்லாசப்பயணம் 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்படுகிறது. நிலாவுக்கு ஒரு முறை உல்லாசப்பயணம் சென்று வந்து விட்டால், அதன்பின்னர் பயணக் கட்டணம் வெகுவாகக் குறையவும் வாய்ப்பு உள்ளதாம்.

Leave a Reply