படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா!

mars-water-nasa

பசடோனா (நாசா தலைமையகம்): ஒருவழியாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்திவிட்டது நாசா.

கூகுள் இதனை ஸ்பெஷல் டூடுள் போட்டு கொண்டாடி வருகிறது.

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை பற்றி உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா நீண்டகாலமாக தீவிர ஆராய்ச்சியில் நடத்தி வருகிறது. இதற்காக அமெரிக்கா ஏற்கனவே அங்கு அனுப்பி வைத்த விண்கலங்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம், செவ்வாய் கிரகத்தில் நீர் படிவங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

இந்தியா அனுப்பி வைத்த மங்கள்யான் விண்கலமும் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி ஆய்வு செய்து புகைப்படங்களையும் தகவல்களையும் அனுப்பி வைத்துள்ளது. அதன்மூலமும் செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி வடிவத்தில் தண்ணீர் படிவங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ ஏற்கனவே ரெகன்னாய்சன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்து உள்ளது. அந்த விண்கலம் கடந்த 2006-ம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

அந்த புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் வெப்பம் நிலவும் காலத்தில் சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக நேற்று தெரிவித்தனர்.

அதாவது, செவ்வாய் கிரகத்தில் கோடைக்காலம் நிலவும் போது அந்த இடத்தில் தண்ணீர் ஓடியதும், குளிர் காலத்தில் அந்த தண்ணீர் உறைந்துவிடுவதும் உறுதியாகியுள்ளது. உறைந்த தண்ணீரின் அடியில் உப்புப்படிவங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

உயிர்கள் வாழ்வதற்கு தண்ணீர்தான் முக்கிய ஆதாரம். செவ்வாயில் தண்ணீர் ஓடியதற்கான உறுதியான ஆதாரம் கிடைத்திருப்பதால், அடுத்தகட்டமாக அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பது பற்றிய ஆய்வை நாசா தீவிரமாக்கவிருக்கிறது.

இந்நிலையில், மனிதமுயற்சியின் இந்த வெற்றியை இணையதளங்களுக்கான தேடுபொறியில் (சர்ச் என்ஜின்) ஜாம்பவனாக விளங்கிவரும் ‘கூகுள்’ வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றது.

செந்நிற கிரகமான செவ்வாயை குறிப்பிடும் ஒரு உருண்டை வடிவத்துடன், அதில் தண்ணீர் இருப்பதை குறிப்பிடும் வகையில் ஒரு டம்ளரையும் ஸ்ட்ராவையும் தனது முகப்பு பக்கத்தின் இன்றைய ‘டூடுள்’ ஆக கூகுள் வெளியிட்டு, சிறப்பித்துள்ளது.

இந்த பக்கத்தை கிளிக் செய்தால் செவ்வாய் கிரகத்தில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்பான செய்தி தொகுப்புகளையும், செவ்வாயில் உயிரினங்கள் வாழ இயலுமா என்பது தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகளையும் காணலாம்!

-ஸ்பேஸ்வாய்ஸ்

Leave a Reply