படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

எண்டெவரின் கடைசி பயணம்…பரவசத்துடன் விடைகொடுத்த அமெரிக்கர்கள்!

கேப் கெனவரல் (ப்ளோரிடா): கடந்த மூன்று தினங்களும் அமெரிக்காவின் பல்வேறு மாகாண மக்களும் ஒரு வானவேடி்ககையைக் கண்டு பரவசப்பட்டு வருகின்றனர்.

அது வேறொன்றுமில்லை… மிகப் பெரிய போயிங் விமானத்தின் மீது ‘அமர்ந்தபடி’ கம்பீரமாகப் பயணிக்கும் செல்லும் எண்டெவர் விண்கலம்!

ப்ளோரிடாவின் துறைமுகத்திலிருந்து கடைசிமுறையாகப் புறப்பட்ட எண்டெவர், நாசாவின் சிறப்பு போயிங் விமானம் 747 முதுகில் ‘அமர்ந்து’ பறந்தது.

இன்னும் இரு தினங்களில் கலிபோர்னியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள ஸ்பேஸ் சென்டரில் நிரந்தரமாக பார்வைக்கு வைக்கப்படுகிறது.

கலிபோர்னியாவுக்கு செல்லும் என்டெவர், வழியில் ஹூஸ்டன், எல் பாஸோ, டெக்சாஸைக் கடந்து, இன்று இரவு கலிபோர்னியாவின் எட்வர்ட்ஸ் ஏர்போர்ஸ் பேஸில் உள்ள நாசாவின் ட்ரைடன் விமான ஆராய்ச்சி மையத்தில் தங்குகிறது.

வெள்ளியன்று வடக்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஆம்ஸ் ஆராய்ச்சி மையத்தைக் கடக்கிறது.

கடைசியாக லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் எண்டெவர், அங்கு விமானத்திலிருந்து தனியாக கழற்றி எடுக்கப்பட்டு, 12 மைல் தூரத்தில் உள்ள கலிபோர்னியா அறிவியல் மையத்தில் பார்வைக்காக நிரந்தரமாக வைக்கப்படுகிறது.

79,379 கிலோ எடை கொண்ட எண்டெவரை எடுத்துச் செல்ல வசதியாக தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் சாலைகளின் ஓரங்களில் உள்ள 400 மரங்கள், சிக்னல்கள், விளக்குக் கம்பங்கள், டெலிபோன்- மின் கம்பங்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இவற்றை ஈடுகட்டும் விதமாக 1000 மரக் கன்றுகளை நடுவதோடு, அனைத்து வசதிகளையும் விரைந்து செய்து தருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எண்டெவருக்கு ஏன் ஓய்வு?

விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்துக்காக உருவாக்கப்பட்ட விண்கலங்களில் ஒன்றுதான் இந்த எண்டெவர்.

1977-லிருந்து என்டர்பிரைஸ் (1977), கொலம்பியா (1981), சேலஞ்சர் (1983), டிஸ்கவரி (1984), அட்லாண்டிஸ் (1985), எண்டெவர் (1986) என ஆறு விண்வெளி ஓடங்களை நாசா வடிவமைத்தது. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையான பொருள்களைக் கொண்டு போய்வரும் பயண ஊர்தியாக இவை பயன்பட்டன.

இவற்றில் சேலஞ்சர் விண்வெளி ஓடம் 1983-ல் வெடித்துச் சிதறி 7 விஞ்ஞானிகளை பலி கொண்டது. கொலம்பியா ஓடம் 2003-ல் விண்வெளியிலிருந்து திரும்பும்போது வெடித்து கல்பனா சாவ்லா உள்பட 7 பேரை பலி கொண்டது.

ஓய்வுக்குப் பிறகு நேருக்கு நேராய்- அட்லாண்டிஸும் எண்டெவரும்!

இதற்கு முந்தைய விண் ஓடங்கள் பணி முடிந்ததும் அமெரிக்காவின் முக்கிய விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நான்காவதும் கடைசியுமான ஓடம்தான் எண்டெவர். 1986-லிருந்து 25 முறை விண்வெளிக்குப் போய் வந்துள்ளது.

மணிக்குப் பதினேழாயிரம் மைல்கள் வேகத்தில் 122,883,151 மைல்கள் பயணித்துள்ளது.

இந்த விண் ஓடத்தை முடிந்தவரை தாழப் பறந்தபடி அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களின் வழியாக கிழக்கிலிருந்து மேற்குக்குக் கொண்டு சென்றது நாசா. எண்டெவரின் இந்தப் பயணத்தை பல்லாயிரம் மக்கள் ரசித்துப் பார்த்து விடை கொடுத்தனர்.

-ஸ்பேஸ்வாய்ஸ்

Leave a Reply