படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

30 ஆண்டுகள்… 21 கோடி கிமீ பயணித்த அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்துக்கு ஓய்வு!

கேப் கெனவரல் (ஃப்ளோரிடா): 30 ஆண்டுகளாக விண்வெளியில் பயணித்து வந்த அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் ஓய்வு பெற்றது.

33 முறை விண்ணுக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கும் சென்றுவந்த இந்த விண்வெளி ஓடம், 20 கோடியே 26 லட்சத்து 73 ஆயிரத்து 974 கி.மீட்டர் தூரம் பயணித்துள்ளது.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகள் கட்டி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு மட்டும் 12 தடவை சென்று வந்துள்ளது. பூமியை 4,848 தடவை சுற்றி வந்துள்ளது.

விண்வெளியில் 305 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்துள்ளது அட்லாண்டிஸ். 195 விண்வெளி வீரர்களை சுமந்து சென்றுள்ளது. இத்தனை சாதனை படைத்த அட்லாண்டிஸ் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை 21-ந்தேதி பணி ஓய்வு பெற்றது. இந்த நிலையில் நேற்று தனது இறுதி பயணத்தை முடித்துக் கொண்டது.

நேற்று 15.8 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து புளோரிடாவில் கேப்கெனவரலில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்துக்கு வந்தது. 76 சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனத்தில் அட்லாண்டிஸ் தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது.

கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள புதிய அருங்காட்சியகத்தில் பொது மக்கள் பார்வைக்காக இந்த விண்வெளி ஓடம் குடியேறுகிறது.

முன்னதாக அட்லாண்டிஸ் விண்கலம் வந்து இறங்கியவுடன் அதன் பணியை போற்றும் வகையில் பட்டாசு முழங்க வாணவேடிக்கையுடன் அதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், நாசா விஞ்ஞானிகளும், ஊழியர்களும் அதனுடன் நின்று போட்டோ எடுத்து கவுரவித்தனர். குழந்தைகள், பொதுமக்கள் என அனைவரும் அமெரிக்கக் கொடியை வீசியபடி அட்லாண்டிஸுக்கு விடை கொடுத்தனர்.

கடந்த மாதம்தான், மற்றொரு விண்கலமான என்டெவர் ஓய்வு பெற்று, கலிபோர்னியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.

-ஸ்பேஸ்வாய்ஸ்

படங்கள்: நாசா

Leave a Reply